Wednesday, January 13, 2016

சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப் பிள்ளையார் ஆலயம்


இவ்வாலயம் சித்தர்கள் அற்புதங்கள் செய்த தலமாகிய சித்தன்கேணிப் பதியிலே மானிப்பாய் - பொன்னாலை பிரதான வீதியும், அராலி - பண்டத்தரிப்பு பிரதான வீதியும் சந்திக்கும் சந்தியிலே அமையபெற்றிருப்பதுடன் இங்கு நாற்சந்தி நாயகனாக உறையும் எல்லாம்வல்ல மஹாகணபதிப் பிள்ளையார் அனைத்து ஜீவராசிகளினதும் இன்னல்களைக் களைந்து அருள்பாலித்துக் கொண்டிருப்பதுடன் இவ்வாலயம் அடியார்களுக்கு ஓர் நல்வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

பதினெட்டாம் நூற்றாண்டு காலப்பகுதியில் வினாயகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பெற்றாலும், விசாலமான கோவில் எம்பெருமான் அருள் கொண்டு 1898 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1912 இலே கும்பாபிசேகம் விமரிசையாக நடைபெற்றது.

பலவித அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டமைந்த இவ்வாலயமானது 1958 இல் இலங்கையிலேயே முதன்முறையாக 33 ஓம குண்டங்கள் அமைத்து மஹா கும்பாபிசேகம் நடாத்தி வைத்த பெருமை எல்லாம்வல்ல விநாயகப் பெருமானையே சாரும்.

இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக விநாயகப்பெருமான் உறைந்து அருள்பாலிப்பதுடன் பரிவார மூர்த்திகளாக கைலாசநாதர் (சிவன்), நித்தியா கல்யாணி (அம்பாள்), வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சனீஸ்வரர், வைரவர், சண்டேஸ்வரர், கடம்பமர முருகன் மற்றும் நாகதம்பிரான் ஆகியோர் அமையப்பெற்று அகிலத்தை காத்து வருகின்றனர்.

இவ்வாலயத்தில் எம்பெருமான் அருள் கொண்டு நித்தியபூசைகள் ஐந்து காலமும் தவறாது நடைபெறுவதுடன் வைகாசி மாதப் பௌர்ணமி தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் முகமாக 11 தினங்கள் மகோற்சவப் பெருந்திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் 12 வருடங்களுக்கொருமுறை புனருத்தாரண வேலைகள் இடம்பெற்று நடைபெற்று வருகின்றது.

http://www.thejaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

No comments:

Post a Comment